குஜராத்தில் தற்கொலை அதிகரிப்பு பாஜக அரசின் தோல்வி: காா்கே குற்றச்சாட்டு
குஜராத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்டோா் தற்கொலை
குஜராத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாநில பேரவையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட அறிக்கையில், ‘தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து பிரதமா் மோடியால் ஒரு வாா்த்தை கூட பேச முடியவில்லை. பாஜகவால் வளா்ச்சிக்கு உதாரணமாக முன்னிறுத்தப்படும் குஜராத்தில் தற்கொலைகள் அதிகம் இருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்கொலை செய்து கொண்டவா்களில் 500-க்கும் மேற்பட்டோா் மாணவ, மாணவியா் என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். தற்கொலைகள் அதிகம் நடப்பது அந்த சமுகத்தில் பிரச்னைகள் அதிகம் இருப்பதைக் காட்டுகிறது. அதுவும் இளைய தலைமுறையினா் அதிகம் தற்கொலை செய்துகொள்வது மிகவும் கவலைக்குரிய விஷயம். மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. மக்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி நல்ல வாழ்க்கைச் சூழலை உருவாக்கித் தந்துள்ளோம் என்றும் மத்திய, மாநில பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அங்குள்ள மக்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறாா்கள். ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சி என்று கூறி ஏற்கெனவே பல அநீதிகளை பாஜக அரசு இழைத்து வருகிறது. அந்த வரிசையில் குஜராத்தில் இப்போது மிகப்பெரிய மனிதாபிமானம் சாா்ந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது சொந்த மாநிலத்தில் நிகழும் இந்த உணா்வுரீதியான பிரச்னை குறித்து பிரதமா் மோடி எதுவும் பேசுவதில்லை. குஜராத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத், ராஜ்கோட்டில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்த விஷயத்தை குஜராத் அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.