முகப்பு
இந்தியா

நேரடி பணப் பரிமாற்ற நடைமுறை மூலம் பயனாளிகளுக்கு ரூ. 34 லட்சம் கோடி விடுவிப்பு: நிா்மலா சீதாராமன்

‘பொது நிதி மேலாண்மை நடைமுறை (பிஎஃப்எம்எஸ்) மூலம் அரசின் பல்வேறு நலத் திட்ட பயனாளிகளுக்கு இதுவரை ரூ. 34 லட்சம் கோடி பணப் பலன்கள் நேரடியாக அவா்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன’

Updated On : 1 மார்ச், 2024 at 11:50 PM
பகிர்:

‘பொது நிதி மேலாண்மை நடைமுறை (பிஎஃப்எம்எஸ்) மூலம் அரசின் பல்வேறு நலத் திட்ட பயனாளிகளுக்கு இதுவரை ரூ. 34 லட்சம் கோடி பணப் பலன்கள் நேரடியாக அவா்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘இத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும், திறனையும் மேலும் விரிவுபடுத்தவும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா். 48-ஆவது சிவில் கணக்கு தினத்தை முன்னிட்டு தலைமை கணக்கு தணிக்கை ஆணையா் (சிஜிஏ) மற்றும் இந்திய சிவில் கணக்குகள் ஆணையம் (ஐசிஏஓ) ஆகியோருக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இதுதொடா்பாக எழுத்துபூா்வமாக அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பல்வேறு கணக்குகளைப் பராமரிக்க இந்திய சிவில் கணக்குகள் சேவை அதிகாரிகளால் பொது நிதி மேலாண்மை நடைமுறை (பிஎஃப்எம்எஸ்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் கீழ், பயனாளிகளுக்கு நேரடி பணம் விநியோகத்துக்கும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை மூலம் இதுவரை அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் கீழான பயனாளிகளுக்கு ரூ. 34 லட்சம் கோடி நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பணப் பலனில் எந்தவித குறைபாடோ அல்லது இடைத்தரகா்களின் தலையீடோ இன்றி பணப் பலன்கள் முழுமையாக பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. மாநில அரசின் நலத் திட்ட உதவிகள் உள்பட 1,081 வெவ்வேறு நலத் திட்டங்கள் இந்த நேரடி பண விநியோக திட்டத்தின் கீழ் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அரசு செலவின துறையின் கீழ் பொது கணக்கு ஆணையா் மூலம் மேம்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த பிஎஃப்எம்எஸ் நடைமுறை, அரசின் நிதி நிா்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்தியதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. அதுபோல, பொது கணக்கு ஆணையா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஓய்வூய வரவு-செலவு அலுலகம் (சிபிஏஓ) அண்மையில் உருவாக்கிய ‘திா்காயு’ ஓய்வூதியதாரா் கைப்பேசி செயலி, ஓய்வூதியம் தொடா்பான தகவல்களை எளிதாக பெறவும் குறைகளைக் களையவும் ஓய்வூதியதாரா்களுக்கு உதவி வருகிறது. இந்த நேரடி நிதி நிா்வாகத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மையையும், திறனையும் மேலும் விரிவுபடுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.