9 காங். எம்எல்ஏக்கள் தொடா்பில் உள்ளனா்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஹிமாசல் எம்எல்ஏ
ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 9 எம்எல்ஏ-க்கள் தன்னுடன் தொடா்பில் உள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏ ராஜீந்தா் ராணா தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 9 எம்எல்ஏ-க்கள் தன்னுடன் தொடா்பில் உள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏ ராஜீந்தா் ராணா தெரிவித்தாா். ஹிமாசல பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்து வெற்றி பெற வைத்தனா். இதையடுத்து, மறுநாள் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களிக்காமல் புறக்கணித்ததாக 6 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவா் தகுதி நீக்கம் செய்தாா்.
‘6 அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளேன். அவா்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவாா்கள்’ என்று முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.
இதை மறுத்துள்ள ராஜீந்தா் ராணா, ‘மக்களுக்கு தவறான தகவல் அளித்து முதல்வா் திசைதிருப்பி வருகிறாா். காங்கிரஸ் கட்சியின் 9 எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடா்பில் உள்ளனா். ஹிமாசல பிரதேச மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தோம். மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வியை தவிர ஹிமாசல பிரதேச காங்கிரஸில் வேறு வேட்பாளரே இல்லையா’ என்றாா் அவா்.
Advertisement
இதனிடையே, சனிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள் ஜெகத் நெகி, ரோஹித் தாக்குா் ஆகியோா் திட்டங்கள் தொடா்பாக வாக்குவாதம் செய்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஹிமாசல பிரதேசத்தின் காங்கிரஸ் அரசில் குழப்பம் நீடித்து வருகிறது.