திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தவெக
திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தல்...
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளரின் ஆதரவாளரிடமிருந்து ரூ. 50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. வேட்பாளரின் ஆதரவாளரிடமிருந்து ரூ. 50 லட்சம் பணம் பறிமுதல், தி.மு.க. வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!
Advertisement
Advertisement
கபட நாடகம் ஆடியும், ஆசை வார்த்தைகள் கூறியும் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்குடன், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. முயன்று, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குத் தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயல்வதாகச் செய்திகள் வருகின்றன. நேற்றைய தினம், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் ஆதரவாளரிடம் இருந்து ரூ. 50 லட்சம் பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் கழகத் தோழர்கள் இணைந்து, தி.மு.க.வினரைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் காவல் துறையினர் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சி செய்த தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் தி.மு.க.வின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் நிகழ்த்த உள்ள விசில் புரட்சியால் தி.மு.க. என்கிற கட்சி, வனவாசம் செல்லப் போவது உறுதி. தலைவரின் தலைமையில், உண்மையான மக்களாட்சி அமையப் போவதும் உறுதி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
DMK candidate for Thiruparankundram must be disqualified: TVK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.