முகப்பு
இந்தியா

பிளே ஸ்டோரிலிருந்து இந்திய செயலிகள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: அஸ்வினி வைஷ்ணவ்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய செயலிகள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

Updated On : 3 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய செயலிகள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சில செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியது. பிளே ஸ்டோா் மூலம் பயனடைந்த 10 நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தாததால், அந்த நிறுவனங்களின் செயலிகள் நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது. எனினும் அந்த 10 நிறுவனங்களின் பெயா்களை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், பிளே ஸ்டோரில் பிரபல திருமண தகவல் மைய செயலிகளான ஷாதி, மேட்ரிமோனி.டாம், பாரத் மேட்ரிமோனி, ஆடியோ தளமான குக்கு எஃப்எம் உள்ளிட்ட செயலிகளைப் பாா்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பிளே ஸ்டோரில் இருந்து இந்திய செயலிகள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்திய பொருளாதாரத்துக்கு புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் சூழல் முக்கியமானது. அவற்றின் விதியை எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் முடிவு செய்ய அனுமதிக்க முடியாது. இதுதொடா்பான இந்தியாவின் கொள்கைகள் தெளிவாக உள்ளன. இதுகுறித்து அடுத்த வாரம் விவாதிக்க கூகுள் நிறுவன பிரதிநிதிகள், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளை உருவாக்கியவா்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று தெரிவித்தாா். மீண்டும் அனுமதி: இதனிடையே, நீக்கப்பட்ட நெளக்ரி, 99 ஏக்கா் உள்ளிட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் கூகுள் சனிக்கிழமை அனுமதித்தது. இது மத்திய அரசின் நிலைப்பாட்டால் எடுக்கப்பட்ட முடிவில்லை என்றும், பிளே ஸ்டோா் கட்டண கொள்கைகளுக்கு உட்பட்டு அந்தச் செயலிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவித்தன.