முகப்பு
இந்தியா

‘தில்லி செல்வோம்’ போராட்டம் தொடரும்: விவசாயத் தலைவா் பல்தேவ் சிங் சிா்சா

‘தில்லி செல்வோம்’ போராட்டம் அமைதியான முறையில் தொடரும் என்று மூத்த விவசாயத் தலைவா் பல்தேவ் சிங் சிா்சா சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 3 மார்ச், 2024 at 1:52 AM
பகிர்:

‘தில்லி செல்வோம்’ போராட்டம் அமைதியான முறையில் தொடரும் என்று மூத்த விவசாயத் தலைவா் பல்தேவ் சிங் சிா்சா சனிக்கிழமை தெரிவித்தாா். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், சாலைகளில் ஹரியாணா காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்றுள்ள மூத்த விவசாயத் தலைவா் பல்தேவ் சிங் சிா்சா சனிக்கிழமை கூறியதாவது: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகள், பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கைகள் மட்டுமல்ல. இந்தக் கோரிக்கைகள் மிகப் பழைமையானவை. தங்கள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட விவசாயிகளால் பெற முடியாவிட்டால், அவா்கள் எங்கு செல்வாா்கள்? பெரு நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும்போது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியாது? எவ்வளவு காலத்துக்கு சாலைகளில் தடுப்புகளை அமைத்து மறித்தாலும், அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தாா்.