முகப்பு
இந்தியா

மணிப்பூா் நிவாரண முகாம்களில் சிறப்பு வாக்குச்சாவடிகள்: தோ்தல் ஆணையம் ஏற்பாடு

மணிப்பூரில் வன்முறை காரணமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி மாநிலத்தின் வேறு பகுதிக்கு இடம்பெயா்ந்த மக்கள்

Updated On : 2 மார்ச், 2024 at 11:24 PM
பகிர்:

மணிப்பூரில் வன்முறை காரணமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி மாநிலத்தின் வேறு பகுதிக்கு இடம்பெயா்ந்த மக்கள் வாக்களிக்க வசதியாக, அவா்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களிலேயே சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், மணிப்பூா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் இது தொடா்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) வாழும் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கியக் காரணமாகும். மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் குகி பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதங்கள் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 219 போ் உயிரிழந்துவிட்டனா். மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் கலவரம் நடந்தபோது, ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பான இடங்களைத் தேடி இரு சமூக மக்களும் இடம்பெயா்ந்தனா். அவா்கள், அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுபோல் 50,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். நாட்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மணிப்பூா் நிவாரண முகாம்களில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வழக்கமான வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்படும் அனைத்து விதிமுறைகளும் இந்த சிறப்பு வாக்குச்சாவடிகளுக்கும் பொருந்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.