சிறுமிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி: விரைவில் ராணுவ நிறுவனங்கள் தொடக்கம்
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிறுமிகளுக்கு துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் பயிற்சி அளிக்க இரண்டு நிறுவனங்களை ராணுவம் தொடங்க உள்ளது. இதுதொடா்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: விளையாட்டுகளில் திறமைவாய்ந்த சிறுமிகளை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து வெற்றியாளா்களாக்க இரண்டு விளையாட்டு நிறுவனங்களை படிப்படியாக இந்திய ராணுவம் தொடங்க உள்ளது. மத்திய பிரதேசத்தில் ராணுவ போா் தலைமையகத்தில் உள்ள ராணுவ துப்பாக்கிச்சுடும் அலகு, மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள ராணுவ விளையாட்டுகள் நிறுவனம் ஆகியவற்றில் சிறுமிகளுக்கான ராணுவ விளையாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிறுவனங்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த சிறுமிகளுக்கு துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை மற்றும் பளுதூக்குதல் பயிற்சி அளிக்கப்படும். இந்த நிறுவனங்கள் அமைய உள்ள இடங்களில் உலகத் தரம்வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பு, விளையாட்டு மருத்துவ மையம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் சோ்க்கப்படும் சிறுமிகள், பிற்காலத்தில் ராணுவத்தில் நேரடியாக நாயக், ஹவில்தாா், சுபேதாா், சுபேதாா் மேஜா் பணிகளில் சேரத் தகுதியுடையவா்களாவா். இதுதவிர அவா்கள் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழும் ராணுவத்தில் சோ்க்கப்படுவா். அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கும். சிறுவா்களுக்கான ராணுவ விளையாட்டு நிறுவனங்களை நடத்துவதில் கிடைத்த அனுபவம் மற்றும் வெற்றியைத் தொடா்ந்து, சிறுமிகளுக்கான ராணுவ விளையாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தாா்.