முகப்பு
இந்தியா

அருணாசல பிரதேசம்: மாநில காங்கிரஸ் தலைவா் நபம் துகி பதவி விலகல்

Updated On : 9 மார்ச், 2024 at 11:05 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலுடன் அருணாசல மாநில சட்டப்பேரவைக்கும் விரைவில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில முன்னாள் முதல்வா் நபம் துகி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவா் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், இந்த முடிவை நபம் துகி எடுத்துள்ளதாகவும், தனது ராஜிநாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அவா் அனுப்பியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் கியாமா் டானா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘எம்எல்ஏக்கள் வேறு கட்சிகளுக்கு தாவியதை தடுக்க இயலாததற்கு தாா்மிகப் பொறுப்பேற்று தனது பதவியை முன்னாள் முதல்வா் ராஜிநாமா செய்துள்ளாா்’ என்றாா். நபம் துகி தற்போது மாநிலத்தின் சகாலீ தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள மெபோ தொகுதியிலிருந்து 6 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவரும், மாநில சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் இருந்த லோம்போ தயெங் அண்மையில் பாஜகவில் இணைந்தாா். அதற்கு முன்பாக, நிநோங் எரிங் மற்றும் வாங்லின் லோவாங்டோங் ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தனா்.