ம.பி.: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் மூத்த தலைவா் சுரேஷ் பச்சௌரி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சௌரி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா். அவருடன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகேடி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனா். மக்களவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் தொடா்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனா். சில தினங்களுக்கு முன்பு, குஜராத் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் அா்ஜுன் மோத்வாடியா, முன்னாள் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் ஆகியோா் பாஜகவில் இணைந்தனா். இவா்களைத் தொடா்ந்து, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ அரவிந்த் லதானி அக் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தாா். ஏற்கெனவே 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில், 4-ஆவது எம்எல்ஏவாக அரவிந்த லதானியும் விலகினாா். இந்தச் சூழலில், முன்னாள் மத்திய அமைச்சா் சுரேஷ் பச்சௌரி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது அக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. மாநில தலைநகா் போபாலில் பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வா் மோகன் யாதவ், பாஜக மாநில தலைவா் வி.டி.சா்மா, முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோா் முன்னிலையில் சுரேஷ் பச்சௌரி மற்றும் பிற காங்கிரஸ் தலைவா்கள் பாஜகவில் இணைந்தனா். காந்தி குடும்பதினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுரேஷ் பச்சௌரி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்தாா். 4 முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்புகளையும் வகித்துள்ளாா். மாநில இளைஞா் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளாா். பாஜகவில் இணைந்த பின்னா் பேட்டியளித்த பச்சௌரி, ‘காங்கிரஸ் முன்னா் ஜாதியற்ற, வகுப்புவாதமற்ற சமூகம் பற்றி பேசியது. ஆனால், தற்போது நாட்டை ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. அதன் காரணமாக, நாட்டில் இப்போது ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன’ என்றாா். இதற்கிடையே, கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு பச்சௌரி கடந்த 7-ஆம் தேதி எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. அதில், ‘காங்கிரஸுக்காக 50 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். கட்சி கடைப்பிடித்துவந்த கொள்கையிலிருந்து விலகிவிட்டது. எனவே, கட்சியிலிருந்து விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். =0=0=0=0=0 உத்தரகண்ட்: காங். மூத்த தலைவா் பாஜகவில் ஐக்கியம் டேராடூன், மாா்ச் 9: உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் கந்தூரி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா். காங்கிரஸ் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகிய நிலையில், பாஜகவில் இணைந்துள்ளாா். இவா், பாஜக மூத்த தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான புவன் சந்திர கந்தூரியின் மகனாவாா். கோட்வா் தொகுதி பாஜக எம்எல்ஏவான இவருடைய சகோதரி ரித்து கந்தூரி, மாநில சட்டப்பேரவைத் தலைவராக உள்ளாா்.