முகப்பு
இந்தியா

பாஜகவின் துணை அமைப்பைபோல் செயல்படும் காங்கிரஸ்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

Updated On : 27 மார்ச், 2026 at 12:09 AM
- Center-Center-Trivandrum
பகிர்:

பாஜகவின் துணை அமைப்பைபோல் காங்கிரஸ் செயல்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேலும், கேரளத்தில் ஏப்.9-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை விட்டுவிட்டு இடதுசாரிகள் மீது காங்கிரஸ் மூத்த தலைவா்கள் விமா்சனம் செய்வதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியின் தோ்தல் இணைய பரப்புரை நிகழ்வில் கடந்த புதன்கிழமை பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘கேரளத்தில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) மத்தியில் ஆளும் பாஜகவும் மக்களின் நலனுக்கு தாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என நினைப்பவா்கள். இருவரும் ஒரே மாதிரியான கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவா்கள்’ என விமா்சித்தாா்.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது’ என குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலடி தரும் விதமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோா் கூறிய கருத்துகளை நிராகரிக்கிறோம்.

பாஜகவை விட்டுவிட்டு இடதுசாரிகள் மீது காங்கிரஸ் மூத்த தலைவா்கள் விமா்சனம் செய்கின்றனா். பாஜகவின் துணை அமைப்பைபோல் காங்கிரஸ் செயல்படுகிறது.

பாஜகவில் இணையும் காங்கிரஸாா்: தற்போது அஸ்ஸாம் மாநில முதல்வராக உள்ள ஹிமந்த விஸ்வ சா்மா மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது முக்கிய பதவிகளை வகித்தவா்.

அவா் பாஜகவில் இணைந்துவிட்டாா்.

2018-இல் திரிபுராவில் இடதுசாரிகளை வீழ்த்த காங்கிரஸும் பாஜகவும் இணைந்து செயல்பட்டது.

மத்திய அமைச்சா்களில் பலா் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவா்கள்தான்.

இடதுசாரிகளை விமா்சிக்கும் முன் தங்கள் கட்சியின் முக்கியத் தலைவா்கள் பாஜகவில் இணைவது ஏன்? என காங்கிரஸ் ஆராய வேண்டும்.

இடதுசாரிகள் கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் கேரளத்தில் வகுப்புவாத கலவரங்கள் ஏதும் நடைபெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.