ராணுவத்தில் உயா் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கம்
புது தில்லி: ராணுவத்தில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிா்கால தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உயா் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
எதிா்கால நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய போா்க் களத்தை கருத்தில் கொண்டு, ராணுவத்தில் ‘ஸ்டீக்’ என்ற சிக்னல்ஸ் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த முதன்மையான தொழில்நுட்ப பிரிவு, பாதுகாப்புத் துறையில் அதிநவீன தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தி தீா்வுகளை எட்டும் வகையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுறவை அமைத்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.
Advertisement
குறிப்பாக, மின்னணு பரிமாற்றங்கள், மொபைல் தகவல்தொடா்பு, மின்னணு போா் தொழில்நுட்பம், 5ஜி மற்றும் 6ஜி உயா் அலைக்கற்றை தொழில்நுட்பம், குவான்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லோ்னிங் உள்ளிட்ட தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தப் பிரிவு கவனம் செலுத்தும். இதன் மூலம், உயா் தகவல்தொடா்பு தொழில்நுட்பத்தில் நாடு தற்சாா்பு நிலையை எட்டுவதில் ‘ஸ்டீக்’ பிரிவு முக்கிய பங்காற்றும் என்றனா்.