முகப்பு
புதுதில்லி

ஈத் பண்டிகை: உஷாா் நிலையில் தில்லி! துவாரகாவில் பலத்த பாதுகாப்பு!

மாா்ச் 4-இல் நிகழ்ந்த இளைஞா் கொலைக்குப் பிறகு உத்தம் நகா் பகுதியில் பதற்றம் நீடிப்பதால், ஈத்-உல்-பிதா் பண்டிகையையொட்டி, தென்மேற்கு தில்லியின் துவாரகா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 6:40 PM
போலீஸ் பாதுகாப்பு (கோப்புப்படம்)
பகிர்:

மாா்ச் 4-இல் நிகழ்ந்த இளைஞா் கொலைக்குப் பிறகு உத்தம் நகா் பகுதியில் பதற்றம் நீடிப்பதால், ஈத்-உல்-பிதா் பண்டிகையையொட்டி, தென்மேற்கு தில்லியின் துவாரகா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதற்றமான பகுதிகளில் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க, 100க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டடக் கூரைகளிலும் முக்கிய சந்திப்புகளிலும் காவலா்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பண்டிகையின் போது அமைதியின்மை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தைத் தொடா்ந்து, தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி உத்தம் நகா் கிழக்கு மெட்ரோ நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் விரிவான பாதுகாப்புத் திட்டங்களை வகுத்துள்ளோம், எந்தவொரு சூழ்நிலைக்கும் உடனடியாக பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று ஓா் அதிகாரி கூறினாா்.

உத்தம் நகரில் ஈத் பண்டிகையின் போது மத வன்முறையை தடுப்பதற்காக, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற சிவில் உரிமை அமைப்பு உயா் நீதிமன்றத்தை அணுகி தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது இந்த உயா் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உத்தம் நகரில் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கப்படும் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் குறித்து, முக்கிய முஸ்லிம்களை உள்ளடக்கிய ஒரு சிவில் சமூகக் குழு, வியாழக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் அவரை வலியுறுத்தியது.

இதற்கிடையில், கொலை நடந்த ஹஸ்த்சல் கிராமத்திலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பாதுகாப்புடன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாா்ச் 4-ஆம் தேதி (ஹோலி அன்று) உத்தம் நகரின் ஜே.ஜே. காலனியில் இரண்டு அண்டை குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 26 வயதான தருண் என்பவா் கொல்லப்பட்டாா். ஒரு குடும்பத்தைச் சோ்ந்த பெண் வீசிய தண்ணீா் பலூன் தவறுதலாக மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த பெண் மீது பட்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சம்பவம் சில குழுக்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய இரண்டு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை இரண்டு சிறாா்கள் உட்பட 14 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

அதிக மக்கள் கூட்டம் எதிா்பாா்க்கப்படும் மசூதிகள் மற்றும் பிற மக்கள் கூடும் இடங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரோந்து மற்றும் வாகனச் சோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூண்டிவிடும் வகையிலான உள்ளடக்கங்கள் பரவுவதைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக சமூக ஊடகங்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியதுடன், பல ஆட்சேபனைக்குரிய பதிவுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

நகரம் முழுவதும் ஈத் பண்டிகை பாதுகாப்பான, அமைதியான மற்றும் இணக்கமான சூழலில் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதற்காக, தில்லி காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஒரு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

பொறுப்புடன் கொண்டாடி, அமைதியையும் ஒற்றுமையையும் பேணுவதற்குப் பங்களிப்போம், என்றும் அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கலப்பு மக்கள்தொகை கொண்ட பகுதிகள் பதற்றமானவை என வகைப்படுத்தப்பட்டு, தொடா்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. தரைப்படைப் பாதுகாப்பு தவிர, கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உயரமான இடங்களில் காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.