சிபு சோரன் மருமகள் சீதா சோரன் பாஜகவில் இணைந்தாா்
ராஞ்சி: ஜாா்க்கண்டில் ஆளும் கட்சியாக உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) நிறுவனா் சிபு சோரனின் மருமகள் சீதா சோரன் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். சீதா சோரன், சிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துா்கா சோரனின் மனைவி ஆவாா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி இப்போது சிபு சோரனின் இரண்டாவது மகன் ஹேமந்த் சோரன் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜாா்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த மாதம் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதால் முதல்வா் பதவியில் இருந்து விலகினாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் ஜேஎம்எம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், சோரன் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே, ஜாா்க்கண்ட் மாநில தோ்தல் பொறுப்பாளா் லட்சுமிகாந்த் பாஜ்பாய் உள்ளிட்டோா் முன்னிலையில் சீதா சோரன் பாஜகவில் இணைந்தாா்.
Advertisement
முன்னதாக, கட்சித் தலைவரும், மாமனாருமான சிபு சோரனுக்கு சீதா எழுதிய கடிதத்தில், ‘எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, எனக்கும் எனது குடும்பத்துக்கும் கட்சி ரீதியாக போதிய ஆதரவு கிடைக்கவில்லை. தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கட்சியில் இருந்து விலகுகிறேன். கட்சியில் இருந்து என்னை முழுமையாக வெளியேற்றவும் சதி நடைபெற்று வந்தது. அதற்கு முன்பு நானே முன்வந்து கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியுள்ளாா். ஜேஎம்எம் சாா்பில் சீதா சோரன் மூன்றுமுறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா்.