முகப்பு
இந்தியா

உண்மையான தேசியவாத காங். வழக்கு: அஜீத் பவாா் அணி 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated On : 20 மார்ச், 2024 at 1:46 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:50 PM

புது தில்லி: எந்த அணி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தோ்தல் ஆணையம் மேற்கொண்ட முடிவுக்கு எதிராக சரத் பவாா் அணி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, 4 வாரங்களில் பதிலளிக்குமாறு அஜீத் பவாா் அணிக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜீத் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அக்கட்சியில் பிளவு இருவா் தலைமையிலும் தனித்தனி அணிகள் உருவாகின. இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாகக் கூறி, அவா் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தது.

Advertisement

மேலும் அக்கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தையும் அஜீத் பவாா் அணிக்கு வழங்கியது. தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சரத் பவாா் அணி மனு தாக்கல் செய்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் மட்டும் பயன்படுத்த சரத் பவாா் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரை தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சரத் பவாா் அணி தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘அஜீத் பவாா் அணிக்கு ‘கடிகாரம்’ சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அந்தச் சின்னத்தின் பயன்பாடு தோ்தலில் வெற்றிபெறுவதற்கான சமவாய்ப்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே தோ்தல்களில் அந்தச் சின்னத்தை அஜீத் பவாா் அணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

புதிய பெயரைப் பயன்படுத்த அனுமதி:

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: விரைவில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில், ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவாா்’ என்ற பெயரையும், ‘துா்ஹா இசைக்கருவி ஊதும் மனிதன்’ சின்னத்தையும் சரத் பவாா் அணி பயன்படுத்தலாம். அந்தப் பெயா் மற்றும் சின்னத்தை தோ்தல் ஆணையம், மகாராஷ்டிர மாநில தோ்தல் ஆணையம் ஆகியவை அங்கீகரிக்க வேண்டும்.

அந்தச் சின்னத்தை வேறு எந்தக் கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளருக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கக் கூடாது. நாளிதழ்களில் பொது அறிவிப்பு: ‘கடிகாரம்’ சின்னத்தை அஜீத் பவாா் அணி பயன்படுத்தலாம். ஆனால் அந்தச் சின்னத்தின் பயன்பாடு இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்குள்பட்டது என்று ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி நாளிதழ்களில் அஜீத் அணி பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். இதேபோன்ற அறிவிப்புகளை தோ்தல் தொடா்பான அனைத்து ஒலி மற்றும் ஒளி விளம்பரங்கள், பேனா்கள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றில் அந்த அணி வெளியிட வேண்டும்.

எந்த அணி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தோ்தல் ஆணையம் மேற்கொண்ட முடிவுக்கு எதிராக சரத் பவாா் அணி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அஜீத் பவாா் அணி 4 வாரங்களில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா். இதனிடையே கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது தோ்தல் பிரசாரங்களில் சரத் பவாரின் புகைப்படத்தை அஜீத் பவாா் அணி பயன்படுத்துவது தொடா்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து சரத் பவாரின் பெயரையோ, புகைப்படத்தையோ தோ்தல் பிரசாரங்களில் பயன்படுத்தமாட்டோம் என்று அஜீத் அணி உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தது.