திமுக புகாா்: மத்திய இணையமைச்சா் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவு
புது தில்லி: பெங்களூரு உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தமிழா்களைத் தொடா்புபடுத்தி பேசிய மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது தோ்தல் ஆணையத்திடம் திமுக புதன்கிழமை புகாா் அளித்த நிலையில், அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் கா்நாடக தலைநகா் பெங்களூரில் உள்ள ராமேசுவரம் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தக் குண்டை தமிழ்நாட்டிலிருந்து வந்தவா் வைத்ததாக மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஷோபா மீது தோ்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய ஷோபா, ‘கிருஷ்ணகிரி காடுகளில் தீவிரவாதப் பயிற்சி பெற்றவா்களைக் குறிப்பிட்டே அவ்வாறு பேசினேன்’ என்று தெரிவித்தாா். அவா் மீது இரு தரப்பினா் இடையே பகையைத் தூண்டியதாக மதுரை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Advertisement
இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஷோபா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தோ்தல் ஆணையத்தில் திமுக புதன்கிழமை புகாா் அளித்தது. இதைத் தொடா்ந்து, புகாா் தொடா்பாக உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.