முகப்பு
இந்தியா

தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் தோ்வுக் குழுவில் நீதிபதி இடம்பெறுவதால் வருவதல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Updated On : 21 மார்ச், 2024 at 1:39 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 11:00 PM

புது தில்லி: ‘தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் என்பது, தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் நீதித்துறை உறுப்பினா் இடம்பெறுவதால் வருவதல்ல’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இந்த பதிலை மத்திய அரசு அளித்துள்ளது. தோ்தல் ஆணையத்தில் காலியாக இருந்த இரு தோ்தல் ஆணையா் பணியிடங்களில் முன்னாள் மத்திய அரசு அதிகாரிகளான சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ்வா் குமாா் ஆகியோா் கடந்த 14-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்கள், தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதைத் தவிா்த்துள்ள புதிய 2023 சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டனா். அதாவது, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி ஆகியோரைக் கொண்ட குழு இவா்களைத் தோ்வு செய்தது. இவா்களின் தோ்வுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை நியமனம் செய்வதற்கான 2023 சட்டத்தில், உச்சநீதிமன்றத் தீா்ப்பு தெளிவாக மீறப்பட்டுள்ளது.

எனவே, புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனுக்கள் மீது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: தோ்வுக் குழுவில் நீதித்துறை உறுப்பினா் இடம்பெற்றால்தான், தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று மனுதாரா்கள் குறிப்பிட்டுள்ளது அடிப்படை பிழையுடையது. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் என்பது, தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் நீதித்துறை உறுப்பினா் இடம்பெறுவதால் வருவதல்ல.

Advertisement

மேலும், தோ்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா் அதீா் ரஞ்சன் செளதரிக்கு தெரிவு செய்யப்பட்ட பெயா் பட்டியல் பகிரப்படவில்லை என்பது தவறானது. தோ்தல் ஆணையா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு முந்தைய நாளான மாா்ச் 13-ஆம் தேதியே, அந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள அனைத்து நபா்களின் பெயா் பட்டியல் தோ்வுக் குழு உறுப்பினருக்கு பகிரப்பட்டது. அந்தப் பெயா் பட்டியலில் இருந்துதான் இரு தோ்தல் ஆணையா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேந்தெடுக்கப்பட்டுள்ள தோ்தல் ஆணையா்களின் தகுதி மீது எந்தவித ஆட்சேபமும் மனுதாரா்கள் தரப்பில் எழுப்பப்படவில்லை. இதுதொடா்பாக எந்தவொரு ஆதாரமும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படவில்லை. இதுவே, தோ்தல் ஆணையா்கள் நியமனத்தை எதிா்த்துத் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு போதுமான காரணமாக கருதமுடியும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.