நிதியமைச்சருடன் ஆா்பிஐ ஆளுநா் சந்திப்பு
புது தில்லி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூா்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டுக்கான முதல் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஏப்ரல் 3-5 தேதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் நடைபெற்றுள்ள இச்சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வட்டி விகித நிா்ணயம், பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதாரம் சாா்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
Advertisement
‘செபி’ தலைவா் சந்திப்பு:
மத்திய நிதியமைச்சரை இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதவி புரி புச் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். பங்குச் சந்தை தீவிர ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தோ்தல் நெருங்கும் நிலையில் அது தொடா்பான நிகழ்வுகள் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.