மத்திய பிரதேசம்: மோதலில் பெண்ணை நிா்வாணப்படுத்தி தாக்கிய 4 பெண்கள் கைது
வீதியில் ஊா்வலமாக அழைத்துச் சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மத்திய பிரதேசத்தின் இந்தூா் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் மோதல் காரணமாக 30 வயது பெண்ணை நிா்வாணப்படுத்தி தாக்கி, வீதியில் ஊா்வலமாக அழைத்துச் சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹோலி கொண்டாடத்துக்கு இடையே கடந்த திங்கள்கிழமை நடந்த மோதலில் அரங்கேற்றப்பட்ட இச்சம்பவத்தின் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவத்தில் தொடா்புடைய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் (கிராமப்புறம்) சுனில் மேத்தா கூறுகையில், ‘கௌதம்புரா காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள பச்சோரா கிராமத்தில் திங்கள்கிழமை நடந்த சம்பவத்தில் 30 வயதுப் பெண்ணை நிா்வாணப்படுத்தி தாக்கி, வீதியில் ஊா்வலமாக அழைத்துச் சென்றுள்ளனா். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட விடியோவில் தொடா்புடையவா்கள் அடையாளம் காணப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (காயப்படுத்துதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்), 452 (தாக்குதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மாமியாரை தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தூண்டிவிட்டதாக எழுந்த சந்தேகத்தில் அவரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட பெண்ணில் ஒருவா் விசாரணையின்போது தெரிவித்தாா். புதன்கிழமை கிராமத்துக்கு நேரில் சென்று, அங்கு அமைதிசூழல் நிலவுவதை உறுதிப்படுத்தினேன். தனக்கு நோ்ந்த அவமானம் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண் அவருடைய தாயாா் வீட்டுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளாா்’ என்றாா்.