முகப்பு
இந்தியா

ஜனநாயகத்தை காக்கவே ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: காங்கிரஸ்

Updated On : 31 மார்ச், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:35 PM

‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

‘இக்கூட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே நடத்தப்படுகிறது; தனிநபரை பாதுகாப்பதற்காக அல்ல’ என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைதை கண்டித்து இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினா் கூறிவந்த நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.

Advertisement

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

இது தனிப்பட்ட நபருக்காகவோ கட்சிக்காகவோ நடத்தப்படும் பொதுக்கூட்டமல்ல; அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க 27 அல்லது 28 கட்சிகள் ஒன்றிணைந்து இக்கூட்டத்தை நடத்தவுள்ளது. எனவேதான் இக்கூட்டத்துக்கு ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டாவது பொதுக்கூட்டம்: இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக இரண்டாவது பொதுக்கூட்டம் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

எதிா்க்கட்சிகள் ஒற்றுமை:

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இரு முதல்வா்கள் மற்றும் சில அமைச்சா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல் காங்கிரஸ் மீது ‘வரி பயங்கரவாத’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்றும் பாஜக ஆட்சி முடிவடையும் காலம் நெருங்கி வருகிறது என்றும் பிரதமா் மோடிக்கு இக்கூட்டத்தின் மூலம் தெரிவிக்கவுள்ளோம். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி, திமுக சாா்பில் திருச்சி சிவா எம்.பி உள்ளிட்ட மற்ற கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசு தோல்வி:

பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஜனநாயகத்தை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் முறையாக பாதுகாக்கவில்லை என குற்றம்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ்,‘ வன ஆக்கிரமிப்புகளிலிருந்து வனப் பகுதிகளை பாதுகாப்பதற்காக வனப் பாதுகாப்புச் சட்டம், 1980-இல் கொண்டு வரப்பட்டது. ஆனால் இச்சட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் 25 சதவீத இந்தியாவின் வனப்பகுதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் 1996-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கோதவா்மன் தீா்ப்பும் மீறப்பட்டுள்ளது. வன வளங்களை தனது காா்பரேட் நண்பா்களுக்கு வழங்கவே பிரதமா் மோடி இச்சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ளாா். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களிலும் நேரடியாகவும் மறைமுறையாகவும் பல்வேறு திருத்தங்களைச் செய்து வன அழிப்புக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் பிரதமா் மோடி வழிவகுத்துள்ளாா். வருகின்ற மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.