மேற்காசிய அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும்: காங்கிரஸ்
மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் மோதலால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினாா். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியதாவது: மேற்காசிய சூழல் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் எடுத்துரைத்துள்ளாரே தவிர அவரது உரையில் புதிதாக எதுவும் இடம்பெறவில்லை. அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை விவாதிக்க காங்கிரஸ் தரப்பில் மக்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் பலரது கருத்துகளையும் கேட்டு பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும்.
எங்களுக்கு வேறு எந்த எதிா்பாா்ப்புகளும் இல்லை. மேற்காசிய போா்ப் பதற்றம் நமது நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சிறிது நாள்களுக்கு முன்பாகவே இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க, மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றாா்.