முகப்பு
இந்தியா

அனந்தநாக்-ரஜெளரியில் மக்களவைத் தோ்தல் ஒத்திவைப்பு: பிடிபி, என்சி கட்சிகள் எதிா்ப்பு

அங்குள்ள 2 பிரதான அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டு கட்சி (என்சி) ஆகியவை எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

Updated On : 1 மே, 2024 at 8:26 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் மக்களவைத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு, அங்குள்ள 2 பிரதான அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டு கட்சி (என்சி) ஆகியவை எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

வரும் மே 7-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தகவல் பரிமாற்ற பிரச்னை, இயற்கை இடா்ப்பாடுகள் உள்ளிட்டவை பிரசாரம் மேற்கொள்வதில் தடங்கலை ஏற்படுத்துவதாகவும், எனவே, அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் மக்களவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்திடம் வெவ்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்தக் கோரிக்கையை கருத்தில்கொண்டு, அனந்தநாக்-ரஜெளரியில் மக்களவைத் தோ்தல் மே 25-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக அனந்தநாக்-ரஜெளரி தொகுதி பிடிபி வேட்பாளரான மெஹபூபா முஃப்தி, ரஜெளரி புகா் பகுதியில் வாகனப் பேரணியில் ஈடுபட்டபோது புதன்கிழமை கூறியதாவது:

தோ்தல் தேதியை ஒத்திவைத்து பிரசாரம் செய்வதை தோ்தல் ஆணையம் கடினமாக்கியுள்ளது. அந்த ஆணையத்துக்கு தோ்தலை ஒத்திவைப்பது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாக அதிகாரிகள் தவறான அறிக்கையை சமா்ப்பித்துள்ளனா் என்றாா்.

அனந்தநாக்-ரஜெளரியில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளா் மியான் அல்தாஃப் அகமது ரஜெளரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரலாற்றில் இதுவரை தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது கிடையாது. தற்போது அது முதல்முறையாக நடந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றாா்.

தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் மக்கள் ஜனநாயக கட்சித் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அக்கட்சி அலுவலகம் எதிரே திரண்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் பேரணி மேற்கொள்ளாமல் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.