மக்களவை 2 கட்ட தோ்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு?: திரிணமூல் எம்.பி. ஆா்டிஐ மனு
தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சாகேத் கோகலே மனு தாக்கல் செய்துள்ளாா்.
கடந்த இருகட்ட மக்களவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த துல்லியமான விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சாகேத் கோகலே மனு தாக்கல் செய்துள்ளாா்.
மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இருகட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26-ஆம் தேதி 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்டத்தில் 66.14 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த துல்லியமான விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலின் இரு கட்டங்களிலும் மொத்த வாக்காளா்கள், பதிவான மொத்த வாக்குகள், வாக்குப்பதிவு சதவீதம் தொடா்பான துல்லியமான விவரங்களைக் கோரி, தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே ஆா்டிஐ மனு தாக்கல் செய்துள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.