பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி.யாகவுள்ள பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. தேவெ கௌடா குடும்பத்தாருக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியதையடுத்து, மஜக கட்சியிலிருந்து தந்தையும் மகனும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது. ஆனால், ஜொ்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.யிடம் கேட்டுக்கொண்டாா்.
இதனிடையே விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணா மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளாா். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாஜக தவறு செய்துவிட்டது. பிரஜ்வல் ரேவண்ணாவின் விடியோக்கள் பற்றி பாஜக மற்றும் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) ஆகிய இரு கட்சிகளுக்கும் தெரியும்.
தெரிந்தும் ஏன் பிரஜ்வலுக்கு சீட் கொடுத்தார்கள்?. பாஜக ஏன் மஜதவுடன் கூட்டணி வைத்தார்கள்?. பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கு வெறும் பாலியல் துன்புறுத்தல் அல்ல. பெண்களை பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.