ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, அறை முழுக்க கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அலாம்கிர் தனிச் செயலாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையில், கணக்கில் வராமல் பதுக்கி வைத்திருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பான விடியோக்களும் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
ஊரக மேம்பாட்டுத் துறையின் முன்னாள் முதன்மை பொறியாளர் வீரேந்திர குமார் ராம் மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ், அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோதனையின்போது, பல்வேறு பைகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தை அதிகாரிகள் ஒரு அறையில் கொட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கைப்பற்றப்பட்ட ரூ.500 நோட்டுகள் அனைத்தும் விரைவில் எண்ணப்பட்டு விவரம் வெளியிடப்படும் என்றும் இது கிட்டத்தட்ட ரூ.20 - 30 கோடி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையில், அதிகாரிகள் தங்க நகைகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே பண மோசடி வழக்கில், ஊரக மேம்பாட்டுத் துறை முன்னாள் தலைமைச் பொறியாளர் விரேந்திர கே. ராம் என்பவர் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இதே வழக்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு தெரியவரவில்லை என்று கூறப்படுகிறது.
மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீரேந்திர கே. ராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து அமலாக்கத் துறை தெரிவிக்கையில், மாநில பொதுப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கும்போது அவர்களிடமிருந்து லஞ்சமாக பணத்தைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் வீரேந்திர கே. ராம் மிக சொகுசான வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.