அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி
’ஐந்து ஆண்டுகளாக அதானி, அம்பானியை விமர்சித்தவர்கள் ஒரே இரவில் நிறுத்தியது ஏன்?’
தொழிலதிபர்கள் அம்பானி, அதானி குறித்து பேசாமல் அமைதி காப்பதற்கு காங்கிரஸ் எவ்வளவு பணம் வாங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வருகின்ற 13-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தெலங்கானாவின் வெமுலவாடாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி-அதானி குறித்து அவதூறாக பேசி வந்த காங்கிரஸின் ‘இளவரசா்’, மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒரே இரவில் அந்த பேச்சுகளை நிறுத்திவிட்டாா். இது சந்தேகத்தை எழுப்புகிறது.
தொழிலதிபா்களுடன் எதுவும் உடன்பாடு எட்டப்பட்டு, டெம்போ வாகனம் நிறைய ‘கருப்புப் பணம்’ அக்கட்சிக்கு சென்றுவிட்டதா?
அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக விமர்சித்து வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? ஏதோ தவறாக நடப்பதை நான் அறிகிறேன். நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
தெலுங்கில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலானது, ஆனால் ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே ‘ஆர்ஆர்’ வரி மூலம் அதே அளவிலான தொகையை தெலங்கானாவில் இருந்து எடுத்து தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பாஜக நாடே முதன்மை எனப் பணியாற்றுகிறது, ஆனால், காங்கிரஸும், பாரத ராஷ்டிரிய சமிதியும் குடும்பமே முதன்மை எனப் பணியாற்றுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.