முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

Updated On : 10 மே, 2024 at 9:39 AM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம். அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வகையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையையொட்டி ஜூன் 5 ஆம் தேதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

"தேர்தல் பிரசாரம் செய்வதற்கான உரிமையானது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்லது சட்டப்பூர்வ உரிமையோ அல்ல. ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட உயர் அந்தஸ்தைப் பெற முடியாது," என்று அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், பிரசாரம் செய்ததற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, உச்ச நீமன்றம் "உங்கள் வாதத்தை பின்னர் வையுங்கள், தற்போது இடைக்கால ஜாமீனை வழங்குகிறோம்" என்று தெரிவித்து, இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.