ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது
புது தில்லி: ரூ.34,000 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த திவான் ஹௌசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் (டிஹெச்எஃப்எல்) முன்னாள் இயக்குநா் தீரஜ் வதாவனை சிபிஐ மும்பையில் மீண்டும் கைது செய்தது.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த கடன் மோசடி தொடா்பாக 17 வங்கிகள் இணைந்து புகாா் அளித்தன.
இந்த வழக்கில் திரஜும் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரும் தீரஜின் சகோதரருமான கபிலும் கடந்த 2022 ஜூலையில் கைது செய்யப்பட்டனா். அக்டோபரில் அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருவரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், தீரஜின் ஜாமீன் விடுப்பு கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து அவரை சிபிஐ மீண்டும் கைது செய்தது.
கடந்த 2010 முதல் 2018-ஆம் ஆண்டு வரை டிஹெச்எஃப்எல் நிறுவனம் வங்கிகளில் ரூ.42,871 கோடி கடன் பெற்று, அதில் ரூ.34,000 கோடியை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.