உத்தரப் பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடி இன்று(மே.14) வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். மனுதாக்கலின்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், தமிழகத்தில் இருந்து அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியது:
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி:
"நாங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். நாங்கள் ஜனநாயகத்தின் தாய். மேலும், எங்கள் தலைவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே:
பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கலில் நாங்கள் கலந்து கொள்ள வந்திருக்கிறோம். அவர் உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர் என்பது எங்களுக்கு பெருமை.
ராஷ்டிரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சௌத்ரி:
வாரணாசி மக்களுக்கு இது ஒரு சிறப்பான தருணம். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது நாம் அனைவரும் உடனிருப்போம். அவருக்கு வாழ்த்துகள். மக்களின் ஆசியுடன் 400 இடங்களில் வெற்றி பெறுவோம். பிரதமர் மோடி 3 ஆவது முறையாக மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் 7 ஆவது மற்றும் கடைசி கட்டமாக வாரணாசியில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாரணாசி தொகுதி பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் கோட்டையாக உள்ளது. வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை அஜய் ராய் எதிர்கொள்வது இது மூன்றாவது முறையாகும். 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்றிருந்தார். இது இங்குள்ள மொத்த வாக்குகளில் 63.6 சதவிகிதம் ஆகும். 2014 யிலும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, குஜராத்தின் வதோரா ஆகிய இடங்களில் போட்டியிட்டு இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.