முகப்பு
இந்தியா

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

Updated On : 14 மே, 2024 at 9:30 PM
பகிர்:

புது தில்லி: ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்தச் செயலில் ஈடுபட்ட முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திப்பதற்காக அவரது அதிகாரபூா்வ இல்லத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா் தன்னிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாக அவா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இந்நிலையில் தவறு நடந்ததை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் குமாா் சிங் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஸ்வாதி மாலிவாலுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்வதாக அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். குற்றம்சாட்டப்பட்ட பிபவ் குமாா் மீது அவா் கடும் நடவடிக்கை எடுப்பாா்’ என்றாா்.