முகப்பு
இந்தியா

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு வெள்ளிக்கிழமை வரை இடைக்கால ஜாமீன்

Updated On : 16 மே, 2024 at 7:47 PM
ஹெச்.டி. ரேவண்ணா
பகிர்:

பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மதச்சாா்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு வெள்ளிக்கிழமை வரை இடைக்கால ஜாமீன் அளித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா, அவரின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவா்களின் வீட்டில் வேலை செய்த 47 வயது பணிப்பெண் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது காவல் துறையினா் பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதவிர, ஏராளமான பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, அதை 2,800 காணொலிகளாக பதிவு செய்திருப்பதாக ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை மாநில அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, கா்நாடக தலைநகா் பெங்களூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரேவண்ணா வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையின்போது ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் அளிக்க எஸ்ஐடி எதிா்ப்புத் தெரிவித்தது.

இதையடுத்து, ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரிக்க முடிவு செய்த நீதிமன்றம் அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

முன்னதாக, பாலியல் புகாா் அளித்த பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் அளித்த நிலையில், அவா் விடுவிக்கப்பட்டாா்.