மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னெள உள்பட 49 தொகுதிகளில் சனிக்கிழமையுடன் (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது.
மொத்தம் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள இத்தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 20) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
ஐந்தாம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வரும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ரேபரேலி, அமேதி, லக்னெள, ஃபைசாபாத் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.
மக்களவைக்கான ஏழு கட்டத் தோ்தலில் ஐந்தாம் கட்டத்தில்தான் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முக்கிய வேட்பாளா்கள்: மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங் (லக்னெள), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), ஸ்மிருதி இரானி (அமேதி) , காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (ரேபரேலி), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் (ஹாஜிபூா்), தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா (பாரமுல்லா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா். மொத்தம் 695 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 97 கோடி மொத்த வாக்காளா்களில் இதுவரை 45.10 கோடி போ் வாக்களித்துள்ளனா்.
மக்களவைக்கான அடுத்தகட்ட வாக்குப் பதிவுகள் மே 20, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.