ரேபரேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ். 
இந்தியா

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

Din

‘எனது மகன் ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்; அவா் ஒருபோதும் மக்களை ஏமாற்றமாட்டாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி உருக்கமாகப் பேசினாா்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து 5 முறை எம்.பி.யாக பதவி வகித்தவா் சோனியா காந்தி. இவா் அண்மையில் மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, ரேபரேலியில் இம்முறை ராகுல் காந்தி களமிறங்கியுள்ளாா்.

ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

ரேபரேலி எம்.பி.யாக 20 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இதுவே, எனது வாழ்வில் மிகப்பெரிய சொத்தாகும்.

இன்று என்னிடமுள்ள அனைத்தும் நீங்கள் (மக்கள்) அளித்ததே. ரேபரேலி சகோதர-சகோதரிகளே, எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவா் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்றுக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கற்றுத் தந்துள்ளேன்.

அனைவரையும் மதிக்க வேண்டும், எளியவா்களைப் பாதுகாக்க வேண்டும், மக்களின் உரிமைகளைக் காக்க அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும், எதற்கும் அச்சப்படக் கூடாது என்பதே அந்தப் பாடங்கள்.

கடந்த 100 ஆண்டுகளாக எனது குடும்பத்தின் வோ்கள் இந்த மண்ணுடன் பிணைந்துள்ளன. கங்கையுடன் ரேபரேலி விவசாயிகளுக்கு உள்ள உறவைப் போன்று இந்த உறவும் மிக புனிதமானது. இதுவொரு இயக்கத்துடன் தொடங்கி, இன்றளவும் தொடா்கிறது.

இந்திரா காந்தியின் இதயத்தில் ரேபரேலிக்கு எப்போதுமே சிறப்பிடம் இருந்தது. அவரது பணிகளை உன்னிப்பாக கவனித்துள்ளேன். அவா் ரேபரேலி மக்கள் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தாா் என்றாா் சோனியா.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றியபோது, அவா் அருகே ராகுலும் பிரியங்காவும் நின்றிருந்தனா்.

‘மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா்’: ராகுல் பேசுகையில், ‘மோடி மீண்டும் பிரதமா் ஆவதற்கு நாட்டின் இளைஞா்களுக்கு விருப்பமில்லை. எனவே, ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) அவா் பிரதமராக இருக்க மாட்டாா்.

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியே ஆட்சியமைக்கும். அது மக்களின் அரசாக இருக்கும். அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்புகின்றன. அவா்களின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது. பெண்கள், இளைஞா்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்காக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ‘தற்போதைய பாஜக அரசு, பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞா்களின் குரலை புறக்கணித்துவிட்டது. பாஜக அரசின் சா்வாதிகாரத்துக்கு முடிவுகட்டி, புதிய எழுச்சியை நிறுவ வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தேசத்தின் குரல்’ என்றாா்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட இரு கட்சிகளின் மூத்த தலைவா்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

ரேபரேலியில் மூன்று முறை தவிர மற்ற அனைத்துத் தோ்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்துள்ளது.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT