பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்தால், நாட்டில் 4 மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் வெற்றியை மோடி 2.O எனக் குறிப்பிட்டதைப்போன்று இம்முறை மோடி 3.O எனக் குறிப்பிட்டு, பேசியுள்ள அவர், 303 இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனக் கணித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், ''பிரதமர் நரேந்திர மோடி மீது எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லை. இம்முறை பாஜக 303 இடங்களில் வெற்றி பெறும்.
மோடி 3.O அரசின் தொடக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என நினைக்கிறேன். நாட்டின் ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
மாநிலங்களில் நிதி சுயாட்சியைக் குறைக்கும் முயற்சிகள் எடுக்கப்படலாம் என நினைக்கிறேன்'' என்றார்.
மாநிலங்களின் நிதி ஆதாரங்களாக இருப்பவை எரிபொருள் (பெட்ரோல், டீசல்) - மதுபானம் - நிலம் ஆகியவைதான் எனக் குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டுவரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.
தற்போது பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் இல்லை. வாட், செஸ் மற்றும் மத்திய விற்பனை வரிகள் மட்டுமே விதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது மாநிலத்தின் வருவாயில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மாநில அரசுகள் இதற்கு எதிரானவை. ஆனால், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டால், மத்திய அரசின் வரிப் பகிர்வை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாநிலங்களுக்கு ஏற்படும்.
தற்போது அதிபட்ச ஜிஎஸ்டி வரி 28% ஆகும். எரிபொருள்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டால், அது இதைவிட கூடுதலாக இருக்கும்.
மேலும், ''நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் விதிமுறைகளை கடுமையாக்கி மாநிலங்களுக்கான அதிகாரப்பகிர்வை குறைக்கலாம். இதன்மூலம் வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்கள் கடன் வாங்குவது கடுமையாக்கப்படும்.
சர்வதேச நாடுகளின் ஆக்கிரமிப்பு பிரச்னைகளை எதிர்கொள்வதில் இந்தியாவின் நிலைத்தன்மை உயரும்'' என்றும் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார வியூகங்களை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.