முகப்பு
இந்தியா

புணே: குடித்துவிட்டுக் கார் ஓட்டிய சிறுவனின் தாத்தாவும் கைது!

புணே சொகுசு கார் விபத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
பகிர்:

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில், குடிபோதையில் கார் ஓட்டி சிறுவன் ஏற்படுத்திய விபத்தில், இரண்டு பேர் பலியான நிலையில், சிறுவனின் தாத்தா சுரேந்திர குமார் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடித்துவிட்டு கார் ஓட்டி இருவர் பலியான சம்பவத்தில், தானே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுமாறு, வீட்டில் பணியாற்றும் கார் ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்தும், சரணடைந்தால், பெரிய தொகையை கொடுப்பதாக ஆசைவார்த்தை காட்டியும் வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சுரேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம், ஒரே சம்பவத்தில், பல்வேறு வழக்குகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது சிறுவனுக்கு பதிலாக, அவர்களது கார் ஓட்டுநர், தானே இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் காவல்துறையிடம் சரணடைய வைக்கவும், விபத்து நேரிட்டதும், ஓட்டுநர் உடனடியாக அருகில் இருந்த ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொள்ளும்படியும் சிறுவனின் குடும்பத்திலிருந்து அறிவுறுத்தல் வந்ததாக காவல்துறையினர் நேற்று தெரிவித்திருந்தனர்.

முதலில், ஓட்டுநர், தானே வாகனத்தை இயக்கியதாகக் கூறியுள்ளார். பிறகுதான் சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதில், ஓட்டுநருக்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தபோது வெளியே என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலையில் சிறுவர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான், கார் ஓட்டுநரை தானே சரணடையுமாறு கூறியதாக சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டிருப்பது வழக்கை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

புணேவில், மே 19ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில், மதுபோதையில், மிகவும் குறுகிய சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த சிறுவன் காரை இயக்கியிருக்கிறார். குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

பிறகு, சிறுவன் செய்த குற்றத்தின் அடிப்படையில், அவர் வயது வந்தவராகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையும் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது கைது சம்பவமாக, ஓட்டுநரை மிரட்டிய வழக்கில் சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டு ஜூன் 5 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. . இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, புணே விபத்தில் பலியான ஐ.டி. ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கல்யாணி நகரில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடமை தவறியதற்காக இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →