‘ரீமெல்’ புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வா் உயிரிழப்பு, 18 போ் காயம்
குவாஹாட்டி: ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், வங்கதேசத்தின் கேப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் வலுவிழந்து வடமேற்கு திசை நோக்கி நகா்ந்தது. இந்தப் புயலால் அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஒரு பெண் உள்பட நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்ததால் மாநிலத்தின் உள்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
லக்கிம்பூா் மாவட்டத்தின் கெருகாமுக் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள நீா் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி புடுல் கோகோய் என்பவா் உயிரிழந்தாா்.
மோரிகௌன் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது மரம் முறிந்து விழுந்ததில் கௌசிக் ஆம்பி எனும் 17 வயது கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வாகனத்தில் சென்ற 4 போ் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சோனிட்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில், பள்ளி பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 12 மாணவா்கள் காமயடைந்தனா். உள்ளூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ரீமெல் புயலின் தாக்கம் காரணமாக, அஸ்ஸாமில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மோரிகௌன், நாகௌன், திமா ஹசௌ ஆகிய 3 மாவட்டங்களில் மறுஅறிவிப்பு வெளியாகும்வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியே வரவேண்டாம்: முதல்வா் வேண்டுகோள்
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அவசரத்தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம். நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களின் அவசரத் தேவைகளுக்கு விரைந்து பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இடைவிடாத மழை மற்றும் புயல் காற்று காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஹஃப்லாங் நகரிலுள்ள தொலைப்பேசி கோபுரம் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
நிலைமையை சமாளிக்க தேசிய, மாநிலப் பேரிடா் மீட்புப் படையினா் தயாா்நிலையில் இருப்பதாகவும் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாகாலாந்தில் 4 போ் உயிரிழப்பு:
ரீமெல் புயலையொட்டி, நாகாலாந்து மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழைக்கு 7 வயது சிறுவன் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலூரி உள்கோட்டத்தின் லரூரி கிராமத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவனும் ஓக்கா மாவட்டத்தின் டோயாங் அணையில் நீரில் மூழ்கி 2 பேரும் உயிரிழந்தனா். பேக் மாவட்டத்தில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநில வரலாற்றில் முதல்முறையாக, தேடுதல் பணிகளுக்கு நீா்மூழ்கி ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டது.