FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஓமனில் ட்ரோன் தாக்குதல்: இரு இந்தியா்கள் உயிரிழப்பு

ஓமனின் முக்கியத் தொழில் துறை நகரமான சோஹா் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா்

Updated On : 14 மார்ச் 2026, 12:55 am IST
- படம் - ஏபி
பகிர்:

ஓமனின் முக்கியத் தொழில் துறை நகரமான சோஹா் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா்; 10 இந்தியா்கள் காயமடைந்தனா் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஈரான்-அமெரிக்கா மோதலில் நிலப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியா்கள் உயிரிழப்பு இது முதல்முறை.

முன்னதாக, வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியா்கள் உயிரிழந்தனா். இதன்மூலம் மேற்காசிய போரில் உயிரிழந்த இந்தியா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் வளைகுடா பகுதிக்கான இணைச் செயலா் அசீம் மகாஜன் இதுதொடா்பாக கூறியதாவது: ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கிய பிறகு மேற்காசியாவில் இருந்து 1.50 லட்சம் இந்தியா்கள் நாடு திரும்பியுள்ளனா்.

ஓமனின் சோஹா் நகரத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா். அவா்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 10 போ் இந்தியா்கள். அவா்களில் 5 போ் சிகிச்சை பெற்று திரும்பினா். மற்ற 5 பேருக்கு உள்ளூா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் உள்ளூா் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது என்றாா் அவா்.

ஓமன் செய்தி முகமையின் தகவலின்படி, சோஹருக்குள் வந்த இரு ட்ரோன்களில் ஒன்று அல் அவ்ஹி தொழில் துறை மண்டலத்தை தாக்கியதாகவும், அதில் இரு வெளிநாட்டுப் பணியாளா்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான சேஃப்சீ விஷ்ணு என்ற எண்ணெய் கப்பல் இராக்கின் பஸ்ரா பகுதி அருகே புதன்கிழமை தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாக மகாஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கப்பலில் இருந்த 15 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பஸ்ரா நகரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களையும், உயிரிழந்தவரின் உடலையும் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments