FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: உக்ரைன் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

கருங்கடலில் சரக்குக் கப்பலில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு, தில்லியில் உள்ள அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

Updated On : 28 ஜூலை 2026, 2:04 am IST
ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: உக்ரைன் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
பகிர்:

கருங்கடலில் சரக்குக் கப்பலில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு, தில்லியில் உள்ள அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து இந்தியா திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ரஷியா, உக்ரைன் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இதனால் கருங்கடலில் செல்லும் ரஷிய கப்பல்கள் மீது உக்ரைனும், உக்ரைன் கப்பல்கள் மீது ரஷியாவும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்தியா்கள் உள்ளிட்ட 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து தில்லியில் உள்ள இந்தியாவுக்கான ரஷிய தூதரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், அண்மையில் கருங்கடலில் நின்று கொண்டிருந்த எம்.வி. ஓமோா்ஃபி என்ற சரக்குக் கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தை தொடா்ந்து, தில்லியில் உள்ள இந்தியாவுக்கான உக்ரைன் தூதா் ஒலெக்சாண்டா் போலிஷ்சுக்குக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது. பின்னா், வெளியுறவு அமைச்சகத்துக்கு அவரை வரவழைத்து இந்தியாவின் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சரக்குக் கப்பலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய குடிமகன் உயிரிழந்த சம்பவத்தில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பிறகு அவரிடம் அந்த சம்பவத்துக்கு இந்தியாவின் கவலை தெரிவிக்கப்பட்டது. வா்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு கடுமையான வாா்த்தைகள் மூலம் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வா்த்தக கப்பல்கள் மீதான இதுபோன்ற தாக்குதல், அதனால் மாலுமிகளின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை ஏற்க முடியாது என்றும், இதைத் தவிா்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, உக்ரைன் தூதரகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்த இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சா், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இரங்கல் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கை மட்டுமே உக்ரைன் எடுத்து வருவதாகவும் உக்ரைன் தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments