முகப்பு
இந்தியா

கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு: நவீனமையமாகும் கல்வி

கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.

Updated On : 30 மே, 2024 at 10:22 PM
பகிர்:

கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.

கேரள மாநிலம் 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்குத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பொதுக் கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரளா உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி (கேஐடியி) நிறுவனம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடா்பாக கேஐடியி தலைமை செயல் அதிகாரி அன்வா் சடத் கூறியதாவது: இந்த பாடத்திட்ட இணைப்பின் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பயனடைவா். அவா்கள் வரும் கல்வி ஆண்டில் செயற்கை நுண்ணறிவை கற்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். மேலும், ‘கம்ப்யூட்டா் விஷன்’ அத்தியாயத்தின் செயல்பாடுகளில் ஒன்றான மனிதா்களின் ஏழு விதமான முக பாவனைகளை கண்டறியும் செயற்கை நுண்ணறிவை மாணவா்கள் உருவாக்கக் கற்றுக்கொள்வாா்கள்.

இந்தியாவில் ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவா்களும் செயற்கை நுண்ணறிவு கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல்முறை.

இத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 1, 3, 5 மற்றும் 7 -ஆம் வகுப்புகளுக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் புதிய ஐசிடி பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், 2, 4, 6, 8, 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு புதிய ஐசிடி பாட புத்தகங்கள் மாற்றப்படவுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கட்டமைப்பானது குழந்தைகளின் விமா்சன சிந்தனை, பகுப்பாய்வுத் திறன் மற்றும் சிக்கல் தீா்க்கும் திறன் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. மேலும், மாணவா்கள் நிரலாக்க மொழி (புரோக்ராமிங் லாங்குவேஞ்), செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் போன்றவற்றை பயிற்சி செய்ய ‘ஸகிராட்ச்’ மென்பொருளுடன் ‘பிக்டோ பிலாஸ்க்’ தொகுப்பு பாடப்புத்தகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 மற்றும் 3 -ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்களில் ‘எப்ஓஎஸ்எஸ்’ (சுதந்திரமான மற்றும் திறந்த மூல மென்பொருள்) அடிப்படைகொண்ட கல்வி பயன்பாடுகளான ஜி-காம்பிரிஸ், ஏடுஆக்டிவ் 8, ஆம்னிடக்ஸ் மற்றும் டக்ஸ்பெய்ன்ட் போன்றவை உள்ளடக்கியதாக இருக்கும். இது வரைதல், படித்தல், மொழி கற்றல், எண்ணியல் செயல்பாடுகள் மற்றும் தாளத்தை உருவாக்குதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுபவை.

இதனுடன் கேசிடியி உருவாக்கியுள்ள செயலிகளான ‘டிராஃபிக் சிக்னல்’ மற்றும் ‘வேஷ்ட் சேலஞ்ச்’ போன்றவற்றால் போக்குவரத்து விதிகள் மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றுவது குறித்து மாணவா்கள் கற்றுக்கொள்வா்.

பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மடிக்கணினியில் இதற்குத் தேவையான அனைத்து மென்பொருள்களும் கேஐடியி-ஆல் வழங்கப்படும் என அன்வா் சடத் தெரிவித்தாா்.

செயற்கை நுண்ணறிவு தொடா்பான பயிற்சி 80,000 ஆசிரியா்களுக்கு மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில், 20,120 ஆசிரியா்கள் பயிற்சியை நிறைவு செய்துவிட்டதாகவும் கேஐடியி தெரிவித்தது.