முகப்பு
இந்தியா

ஒரே நேரத்தில் கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தொடக்கம்! வழக்கத்துக்கு மாறானது!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது!

Updated On : 30 மே, 2024 at 8:17 AM
கோப்புப் படம்.
பகிர்:

நாடு முழுவதும் நான்கு மாத கால பருவமழைக் காலமான, தென் மேற்குப் பருவமழை, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என ஒரே நேரத்தில் தொடங்கியிருக்கிறது.

நாட்டின் ஒரு பக்கம் வரலாறு காணாத வகையில் கடுமையான வெயிலும், மறுபக்கம் கனமழையும் பெய்து வரும் நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இரண்டு நாள்கள் முன்னதாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியதில்லை. இது வழக்கத்துக்கு மாறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, 2017ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி இவ்வாறு நடந்தது. அதுபோல் இந்த ஆண்டும் கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த ஒரு சில நாள்களாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்த பிறகே, பருவமழை தொடங்கியதை அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன் 8-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நிகழாண்டு மே 30-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வந்ததால், சாலைகளையும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கேரளத்தில் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →