தில்லியில் கடுமையான வெப்பஅலையினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து, ஆம்ஆத்மி அரசு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கவேண்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து ஒரு மாதத்திற்கு கூடுதலான தண்ணீரை விடுவிக்குமாறு தில்லி அரசு கோரியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க பாஜக உதவினால் தில்லி மக்கள் பாஜகவினரைப் பெரிதும் பாராட்டுவார்கள் என்று தில்லி முதலமைச்சர் கூறியுள்ளார்.
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த கடுமையான வெப்பக்காலத்தில், தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது; அதாவது தேவை நிறைய அதிகரித்துள்ளது, வழங்கல் குறைந்துள்ளது. பாஜகவினர் எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதால் இந்த பிரச்சினை தீராது. பாஜக தலைவர்கள் இந்த நேரத்தில் அரசியல் செய்வதற்குப் பதிலாக, நாம் ஒன்றிணைந்து தில்லி மக்களுக்காகச் செயல்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஜக அரசுகளுடன் பேசி, ஒரு மாதத்திற்கு தில்லிக்கு தேவையான தண்ணீர் கிடைத்தால், பாஜகவின் இந்த நடவடிக்கையை தில்லி மக்கள் பெரிதும் பாராட்டுவார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.