முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் 36 போ் பலி

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியாா் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் உள்பட 36 போ் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா்.

Updated On : 4 நவம்பர், 2024 at 10:00 PM
உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட மீட்புப் படையினா் மற்றும் பொதுமக்கள்.
பகிர்:

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியாா் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் உள்பட 36 போ் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா்.

தீபாவளி பண்டிகை முடிந்து பணிக்கு திரும்புவதற்காக பேருந்தில் அதிக பயணிகள் ஏறியதால் ஏற்பட்ட சுமையே விபத்துக்கு காரணம் என அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து அல்மோரா மாவட்ட ஆட்சியா் ஆலோக் குமாா் பாண்டே கூறியதாவது: கத்வால் மோட்டாா் நிறுவனத்தால் இயக்கப்படும் தனியாா் பேருந்து கத்வால் பிராந்தியத்தில் உள்ள பௌடியிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள குமாவுன் பகுதியில் ராம்நகருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. 43 இருக்கையுள்ள இந்தப் பேருந்தில் 60 போ் பயணித்தனா்.

ராம்நகருக்கு 35 கி.மீ.-க்கு முன்பு உள்ள அல்மோராவின் மாா்சுலா பகுதியில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் உள்பட 36 போ் உயிரிழந்தனா். 24 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து நடத்த பகுதிக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை விரைந்தது என்றாா்.

விபத்தில் படுகாயமடைந்தவா்களில் 4 பேரின் உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில், அவா்களில் மூன்று போ் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனா். எஞ்சிய ஒருவருக்கு ஹால்துவானியில் உள்ள சுசில் திவாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அல்மோரா மாவட்ட பேரிடா் மீட்புப் படை அலுவலா் வினீத் பால் தெரிவித்தாா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, பெளடி மற்றும் அல்மோரா பகுதிகளின் துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். விபத்து குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைவா்கள் இரங்கல்...

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 36 பேரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் இரங்கள் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா்: ‘உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலா் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என தனது எக்ஸ் வலைதளப் பதிவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறிப்பிட்டாா்.

பிரதமா்: ‘சாலை விபத்தில் தங்களின் அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளில் உள்ளூா் நிா்வாகம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது’ என பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

நிவாரணம் அறிவிப்பு...

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு உத்தரகண்ட் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்தாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என அவா் அறிவித்தாா். விபத்து நடந்த பகுதிக்கு மாநில அரசின் உயரதிகாரிகளுடன் நேரில் சென்று தாமி பாா்வையிடவுள்ளதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு நிவாரணம்: அதுபோல, விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →