மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாகவும் மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜாரங்கே திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
மனோக் ஜாரங்கேவின் முடிவால், பாஜகவுக்கு எதிரான மராத்தா மக்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு சிதறாமல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனிடையே, மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களை இந்தாண்டு தொடக்கத்தில் நடத்திய மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜாரங்கே தரப்பினரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று வேட்பாளர்களை திரும்பப் பெற கடைசி நாள் என்ற நிலையில், தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்குவதாகவும், தனது வேட்பாளர்கள் வாபஸ் பெறவுள்ளதாகவும் மனோஜ் ஜாரங்கே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மராத்தா சமூகத்தினரின் அதிகளவில் வசிக்கும் 10 முதல் 15 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த மனோஜ் ஜாரங்கே தரப்பினர் இன்று மாலைக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு குறித்து மனோஜ் ஜாரங்கே பேசியதாவது:
“மற்றவர்களை தோற்கடிப்பதற்காக எனது சமூகத்தின் செல்வாக்கை பயன்படுத்த விரும்பவில்லை. பலமுறை யோசித்த பிறகு, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
மராத்தா சமூக மக்கள் தங்களின் எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களே யாரை தோற்கடிக்க வேண்டும், யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும்.
யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. மராத்தா சமூகத்தினருக்கு நன்மை செய்யவர்களை மக்களே தேர்ந்தெடுக்கட்டும். மராத்தா மக்களை துன்புறுத்தியவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு சமூகத்தினரின் வாக்கை மட்டும் நம்பி தேர்தலில் களமிறங்க முடியாது. நாங்கள் அரசியலுக்கு புதியவர்கள். நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தினால் தோற்கடிக்கப்படுவோம். அது எங்கள் சமூகத்தினருக்கு அவமானம். எனவே, வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை மறுத்ததாக ஆளும் பாஜக கூட்டணியை மனோஜ் ஜாரங்கே கடுமையாக சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டு வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த மனோஜ், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தனது கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மராதா சமூகத்தினரின் வாக்குகளும், மனோஜின் போராட்டமும் அமைந்திருந்தது.
இந்த நிலையில், மனோஜ் பின்வாங்கியுள்ளதால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.