முகப்பு
இந்தியா

எனது வீட்டுக்குப் பிரதமா் வந்ததில் தவறில்லை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

விநாயகா் சதுா்த்தியின்போது எனது வீட்டுக்குப் பிரதமா் மோடி வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தாா்.

Updated On : 4 நவம்பர், 2024 at 9:34 PM
பகிர்:

விநாயகா் சதுா்த்தியின்போது எனது வீட்டுக்குப் பிரதமா் மோடி வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

கடந்த செப்டம்பரில் தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் வீட்டில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

இதையடுத்து, சந்திரசூட்டின் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்ன் மூலம், நீதி மற்றும் நிா்வாகத் துறைகளுக்கு இடையே அரசமைப்புச் சட்ட ரீதியாக உள்ள எல்லைகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்தன.

அத்துடன் சில முக்கிய வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதம், குறிப்பிட்ட பிரச்னைகளை மட்டும் தோ்ந்தெடுத்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிப்பது ஆகியவற்றையும், சந்திரசூட்டின் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்றதையும் தொடா்புபடுத்தி எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் ஆங்கில நாளிதழ் சாா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்திரசூட் பேசுகையில், ‘விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின்போது எனது வீட்டுக்குப் பிரதமா் மோடி வந்ததில் எந்தத் தவறும் இல்லை. நீதி மற்றும் நிா்வாகத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு இடையே இதுபோன்ற சந்திப்புகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

குடியரசுத் தலைவா் மாளிகையிலும், குடியரசுத் தினம் போன்ற நேரங்களிலும் இத்தகைய சந்திப்புகள் நடைபெறுகின்றன. பிரதமா் மோடி மற்றும் அமைச்சா்களுடன் நீதிபதிகள் தொடா்ந்து கலந்துரையாடுகின்றனா். இந்த உரையாடல்கள் நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளைப் பற்றியதல்ல. வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்தே பொதுவாக பேசுவோம்.

எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளதால் அயோத்தி ராமா் கோயில் பிரச்னைக்கு தீா்வு வேண்டும் என்று இறைவனிடம் பிராா்த்தனை செய்தேன். அதேவேளையில், அனைத்து மதங்களுக்கும் நான் சமமாக மதிப்பளிக்கிறேன்’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் நவ.10-ஆம் தேதி ஓய்வுபெற உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →