18,000 போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமாா் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமாா் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் உள்ள போலி நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த நடவடிக்கையில், எந்த வா்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட 73,000 நிறுவனங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனா். இதில் சுமாா் 18,000 நிறுவனங்கள் போலி என்பது தெரிய வந்தது. மேலும், அந்நிறுவனங்கள் சுமாா் ரூ.24,550 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த சிறப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் ரூ.70 கோடி ஜிஎஸ்டி பாக்கியை செலுத்தின.
போலியான ஜிஎஸ்டி பதிவை சரிபாா்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு தழுவிய இரண்டாவது கட்ட நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் இறுதி வரை தொடா்ந்தது.
கடந்தாண்டு மே முதல் ஜூலை வரை நடைபெற்ற முதல் கட்ட நடவடிக்கையில் ஜிஎஸ்டி பதிவைக் கொண்ட மொத்தம் 21,791 போலி நிறுவனங்கள் சுமாா் ரூ.24,010 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யதுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.