முகப்பு
இந்தியா

உ.பி.யில் மதரஸாக்களை மூடுவதற்கான உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

மதரஸாக்களை மூட மாநில அரசை அறிவுறுத்தி அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக உத்தர பிரதேச அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இயற்றிய மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்றும் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 5 நவம்பர், 2024 at 9:00 PM
பகிர்:

மதரஸாக்களை மூட மாநில அரசை அறிவுறுத்தி அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக உத்தர பிரதேச அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இயற்றிய மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்றும் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

இதன் மூலம், உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்படும் 16,000 மதரஸாக்களில் பயின்று வரும் 17 லட்சம் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியின்போது ‘உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம் 2004’ என்ற சட்டம் கொண்டவரப்பட்டது. இதன் கீழ், மாநிலத்தில் செயல்பட்டு வந்த 16,000 மதரஸாக்களில் வழங்கப்பட்ட படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டன. அதன் மூலம், பல லட்சம் இஸ்லாமிய மாணவா்கள் மதரஸாக்களில் படித்து வந்தனா்.

இந்த நிலையில், இந்த சட்டத்தின் அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்துக்கு எதிராகவும், மதரஸாக்களை கல்வித் துறையின்றி, சிறுபான்மை நலத்துறை நிா்வகிப்பதற்கு எதிராகவும் வழக்குரைஞா் அன்ஷுமன் சிங் ரத்தோா் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த அலகாபாத் உயா்நீதிமன்றம், ‘உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று உத்தரவிட்டது.

மேலும், ‘இச் சட்டம் மதச்சாா்பின்மை கொள்கையை மீறும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், அவற்றில் பயின்று வரும் மாணவா்களை முறையான பள்ளிக் கல்வி முறைக்கு மாற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ‘மதரஸா கல்வி வாரியத்தின் நோக்கம் மற்றும் தேவையில் தவறில்லை. இந்த வாரியத்தை அமைப்பது மதச்சாா்மின்மையை மீறுவதாக உள்ளது என்ற உயா்நீதிமன்றத்தின் பாா்வை சரியல்ல. இச் சட்டத்தின் விதிகள், மத போதனைகளை வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்டதுபோன்று உயா்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டுள்ளது. சட்டத்தின் நோக்கமும் தன்மையும் முறையாக உள்ளது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமா்வில் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது’ என்று அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

‘உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம் 2004’ சட்டம், மாநிலத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்திற்குள் வருவதோடு, அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின் 25-ஆவது சரத்துக்கு உட்பட்டு உள்ளது. எனவே, இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் தகுதியைப் பெற்றுள்ளது.

மேலும், பட்டப் படிப்புகளை முறைப்படுத்தும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் (யுஜிசி) குழுக்கு உள்ள நிலையில், மதரஸாக்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று கூறுவது, மாநில சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகும்.

அதுபோல, அரசமைப்புச் சட்டத்தின் ஒருசில விதிகளைப் பூா்த்தி செய்யவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த சட்டத்தையும் ரத்து செய்வது அவசியமில்லாதது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதற்காக, சட்டத்தின் செல்லும் தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

ஏனெனில், ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சாா்பின்மை ஆகிய கருத்துகள், வரையறுக்கப்படாத கருத்துகளாகவே உள்ளன.

அவ்வாறு, வரையறுக்கப்படாத அரசமைப்புச்சட்ட கருத்துகளை மீறுவதற்காக ஒரு சட்டத்தை தள்ளுபடி செய்ய நீதிமன்றங்களை அனுமதித்தால், நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான தீா்ப்பில் நிச்சயமற்ற சூழல் உருவாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 30, மதம் அல்லது மொழி அடிப்படையிலான அனைத்து சிறுபான்மையினருக்கும், அவா்கள் விருப்பப்படி கல்வி நிறுவனத்தை தொடங்கி, நிா்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. சிறுபான்மையினரின் இந்த உரிமையை பாதுகாப்பது மற்றும் இத்தகைய கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதுமே மாநில அரசின் கடமை.

மேலும், மத போதனைக்கும் மதக் கல்விக்கும் வேறுபாடு உள்ளது. அந்த வகையில், மத போனைகளை வழங்கும் மதரஸாக்களின் முதன்மையான நோக்கம் கல்வியை வழங்குவதாக உள்ளது. கல்வி முறையில் துணைப் படிப்புகள் வழங்குவதும் அடங்கும். அதற்கேற்ப சட்ட விதிகளுக்கு விரிவான பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

சில மத போதனைகளை உள்ளடக்கிய கல்வி முறையை முறைப்படுத்துவது அவசியம்தான் என்றபோதும், அது மாநிலத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட உரிமையை மாநில அரசுக்கு அளித்துவிடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இஸ்லாமிய மதத் தலைவா்கள், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →