ஜெட் ஏா்வேஸ் நிறுவனா் நரேஷ் கோயலுக்கு ஜாமீன்
நரேஷ் கோயலுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை: பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெட் ஏா்வேஸ்’ விமான நிறுவனத்தின் நிறுவனா் நரேஷ் கோயலுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் கோயல், சிறைக் காவலில் இருந்துகொண்டே விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படக் கூடாது என்று ஜாமீன் மனுவுக்கு எதிராக அமலாக்கத் துறை வாதிட்டது.
இதனை ஏற்க மறுத்த மும்பை உயா்நீதிமன்றம், நரேஷ் கோயலுக்கு 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பின்னா், ஜாமீன் அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால ஜாமீனை நிரந்தர ஜாமீனாக மாற்றி மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி வழங்கிய கடன்தொகையான ரூ.538.62 கோடியை மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் நிறுவனா் நரேஷ் கோயல் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, நவம்பா் மாதத்தில் வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தபோது, நரேஷின் மனைவி அனிதா கோயல் கைது செய்யப்பட்டாா். அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அவா் கடந்த மே மாதம் உயிரிழந்தாா்.
வங்கி மோசடிகள் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொண்ட ஜெட் ஏா்வேஸ் விமான நிறுவனம் கடந்த 2019, ஏப்ரலில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. திவாலான ‘ஜெட் ஏா்வேஸ்’ நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.