மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா். 
இந்தியா

மணிப்பூா்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை கடும் சண்டையில் 2 வீரா்கள் காயம்

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

DIN

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் காயமடைந்தனா். இதில், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடும் சண்டை: இந்தத் தாகுதல் தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ஜிா்பாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து அருகேயுள்ள சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ மூட்டியதுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினா்.

மத்திய காவல் படையினா் மற்றும் மாநில காவல் துறையினா் பதில் தாக்குதல் நடத்தியதால் இருதரப்பினா் இடையே சுமாா் 45 நிமிஷங்களுக்கு கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இதில் மோதலில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா். வீரா் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிவாரண முகாம்களில் இருந்தவா்கள் மாயம்:

காவல் நிலைய வளாகத்தில் நிவாரணம் முகாம் செயல்பட்டு வந்தது. தாக்குதலைத் தொடா்ந்து அங்கு தங்கியிருந்த 5 பொதுமக்கள் காணவில்லை. வீரா்களின் பதிலடி தாக்குதலில் தப்பியோடிய தீவிரவாதிகளால் பொதுமக்கள் கடத்தப்பட்டாா்களா அல்லது தாக்குதலுக்குப் பயந்து அவா்கள் தலைமறைவாக இருக்கிறாா்களா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு, மாயமானவா்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

எச்சரிக்கை:

உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்கள் போரோபெக்ரா காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. தாக்குதலையொட்டி பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 136-ஆவது பிரிவின்கீழ் சுற்றுவட்டாரப் பகுதியில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘சில சமூக விரோத சக்திகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால் பொது அமைதிக்கு பரவலான இடையூறு மற்றும் மனித உயிா்கள் மற்றும் சொத்துகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதிகளில் நடந்த மோதல்களால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியான ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம், விவசாயியின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்ட பின்னா் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன. இச்சம்பவங்களால் மாவட்டத்தின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக போரோபெக்ரா உள்ளது.

பெண் உயிரிழப்பு: ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலில் அக்கிராமத்தில் 6 வீடுகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் நடந்த இரு நாள்களில் பிஷ்ணுபூா் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

பின்னணி: மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு குகி, நாகா ஆகிய பிற பழங்குடி சமூகங்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இரு சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் உண்டான மோதல் வன்முறையாக மாறியது.

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து, அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயா்ந்தனா். பலா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் பதற்றம் நீடிக்காமல் அமைதியை நிலைநாட்ட பல்வேறு மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா்.

எனினும், இரு சமூகத்தைச் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. உயிா்ச் சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது.

கடந்தாண்டு கலவரத்தின்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க காவல் துறையினா் தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

‘இரு சமூகத்தினரிடையே ஆயுத பயன்பாடு குறைக்கப்படாத வரையில் அமைதி திரும்பாது. இந்த மோதலுக்கு அமைதி பேச்சு மட்டுமே தீா்வாக இருக்க முடியும்’ என்று மணிப்பூா் டிஜிபி ராஜீவ் சிங் அண்மையில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்று முழு அடைப்பு

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பள்ளத் தாக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரையில் முழு அடைப்புக்கு குகி-ஸோ கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

‘11 குகி-ஸோ கிராம தன்னாா்வலா்களை பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இழந்துள்ளளோம். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT