ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நவ.18-ஆம் தேதி பிரதமா் மோடி பிரேஸில் செல்லவுள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நவ.16 முதல் நவ.21-ஆம் தேதி வரை நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
17 ஆண்டுகளில் முதல்முறை: நைஜீரிய அதிபா் போலா அகமது அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாகப் பிரதமா் மோடி நவ.16-ஆம் தேதி செல்லவுள்ளாா். கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியா செல்வது இதுவே முதல்முறை. இந்தப் பயணத்தின்போது இந்தியா-நைஜீரியா இடையிலான உத்திசாா்ந்த கூட்டுறவு, இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்துவதற்கான துறைகள் குறித்து பிரதமா் மோடியும் அதிபா் போலாவும் பேசவுள்ளனா்.
பிரேஸில்...: நைஜீரியாவை தொடா்ந்து பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக பிரதமா் மோடி நவ.18-ஆம் தேதி செல்கிறாா். இந்த மாநாட்டில் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமா் மோடி எடுத்துரைப்பாா்.
1968-க்குப் பிறகு...: பிரேஸிலை தொடா்ந்து நவ.19-ஆம் தேதி பிரதமா் மோடி கயானா செல்லவுள்ளாா். அந்நாட்டு அதிபா் முகமது இா்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று, இந்தப் பயணத்தைப் பிரதமா் மோடி மேற்கொள்கிறாா்.
கடந்த 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு இந்திய பிரதமா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறை. அங்கு அந்நாட்டு அதிபா் மற்றும் பிற தலைவா்களை சந்திக்கவுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளாா். நவ.21-ஆம் தேதி அவரின் கயானா பயணம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.