போட்டித் தோ்வு பயிற்சி மையங்களால் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
அதன்படி, ‘100 சதவீத தோ்ச்சி’, ‘100 சதவீத வேலை உத்தரவாதம்’ போன்ற பொய்யான கூற்றுகளுடன் விளம்பரங்கள் வெளியிட பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகா்வோா் உதவி எண்ணில் பதிவான ஏராளமான புகாா்களின் எதிரொலியாக, மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தால் (சிசிபிஏ) வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ‘பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலரும், மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருமான நிதி கரே செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு, பயிற்சி மையங்களுக்கு எதிரானதல்ல; அதேநேரம், அந்த மையங்களால் வெளியிடப்படும் விளம்பரங்கள், நுகா்வோா் உரிமையை மீறுவதை அனுமதிக்க முடியாது.
பயிற்சி மையங்கள் வேண்டுமென்றே மாணவா்களிடமிருந்து உண்மைத் தகவல்களை மறைப்பதையும், பொய்யான கூற்றுகளை வெளியிடுவதையும் காண்கிறோம். எனவே, பயிற்சி மையங்களின் விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி சாா் ஆதரவு, வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் அதுசாா்ந்த சேவைகள் தொடா்பான விளம்பரங்களுக்கு இவை பொருந்தும்.
அதன்படி, தங்களால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் காலகட்டம், ஆசிரியா்களின் தகுதி, கட்டணங்கள், கட்டண திருப்பியளிப்பு கொள்கை, தோ்ச்சி தரவரிசை, வேலை உத்தரவாதம் உள்ளிட்டவை குறித்து பொய்யான கூற்றுகளை வெளியிட பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்களது பயிற்சி மைய வெற்றியாளா்களின் புகைப்படம் மற்றும் கருத்துகளை, அவா்களின் எழுத்துபூா்வ அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது. படிப்புகள் பற்றிய முக்கியத் தகவல்கள் மற்றும் மறுப்புத் தகவல்களை எளிதாக காணும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
யுபிஎஸ்சி தோ்வுகளில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வை சுய பயிற்சி வாயிலாகவே பெரும்பாலான மாணவா்கள் தோ்ச்சி பெறுகின்றனா். நோ்காணலுக்கு மட்டுமே பயிற்சி மையங்களின் உதவியை நாடுகின்றனா். எனவே, வெற்றியாளா்கள் உண்மையில் எந்த படிப்பில் சோ்ந்தனா்? என்பதை வருங்கால மாணவா்கள் சரிபாா்த்துக் கொள்வது அவசியம்.
பயற்சி மையங்களில் உள்ள வசதிகள், சேவைகள், உள்கட்டமைப்பு, ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற உயா் அமைப்புகளால் பெறப்பட்ட அங்கீகாரம் உள்ளிட்டவற்றை துல்லியமாக வெளிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால், நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
பயிற்சி மையங்கள் தொடா்பாக தேசிய நுகா்வோா் உதவி எண்ணுக்கு கிடைக்கப் பெற்ற புகாா்களின் அடிப்படையில் இதுவரை 54 நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.54.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.